சூஃபி மகாகவி மௌலானா ரூமி அவர்களின்
கவிதைகள் கருணை மழை என்பது மீண்டும் ஒருமுறை எனக்குக் காட்டப்பட்டது. இரண்டு வருடங்கள்
கழித்து மீண்டும் அவரது கவிதைகளை வாசிக்கத் தொடங்கியபோது வெளியிலும் பருவகாலம் மாறி
மழை பொழிந்தது. அது, அகவுலகின் பருவகாலத்திற்கு ஒத்திசைவாய் ஆனது.
பதின்மூன்றாம்
நூற்றாண்டில், துருக்கி நாட்டின் கோன்யா என்னும் ஊரில், திராட்சை தோட்டங்களும் பூவனங்களும்
வயல்களுமான நிலப்பகுதியில், வசந்த ருதுவில் அந்த மகான் தனது அணுக்கச் சீடர்களுடன் நடந்தபடி
உரையாடிய ஞானக் கருத்துக்களே அவரின் கவிதைகள் என்பதால் அவற்றில் செடிகளும் தருக்களும்
பூக்களும் கனிகளும் பறவைகளும் விலங்குகளும் ஆறும் ஓடையும் கடலும் புல்வெளியும் மலையும்
இடம் பெற்றிருப்பதில் வியப்பென்ன?
தோட்டம்
என்பது ஆன்மிக உலகின் குறியீடாகவே அவரின் கவிதைகளில் பொருள் படுகிறது. சொல்லப்போனால்,
புறவுலகில் நாம் காணும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ஆன்மிக உண்மைகளை வெளிச்சமிட்டுக்
காட்டும் அகல் விளக்குகளாக ஏற்றி வைத்த கவித்துவம் ரூமியின் தனித்தன்மை எனலாம். அந்த
அகல் விளக்குகளில் அவர் ஏற்றிய சுடர்கள் எல்லாம் அவரின் இதயத்தில் இருந்த ஞானச் சூரியனாம்
ஷம்சுத்தீன் தப்ரேஸ் அவர்களின் கொடை என்றே ரூமி சொல்கிறார். ஆம், ஷம்ஸ், ரூமியின் குருநாதர்.
இறந்த
நிலம் மழை நீர் பட்டு உயிர் பெறுவது போல் நம் உள்ளங்களும் ரூமியின் கவிமழையில் நனைந்து
உயிர் பெறட்டும். அவரின் கவிதைகள் வழி அவருடன் ஆன்மிகத் தோட்டத்தில் கொஞ்ச காலம் உலவி
வருவோம் வாருங்கள் என்றழைத்து, வசந்தத்தின் வருகையைச் சொல்லுமொரு ’ரூமிக் கவிதை’ தந்து
உங்களை வரவேற்கிறேன்.
மீண்டும்,
கழுநீர் சாய்கிறது ஆம்பலிடம்
மீண்டும், ரோஜா தன் ஆடை களைகிறது
வேறொரு
உலகத்தில் இருந்து வந்துள்ளனர்
பச்சைக்காரர்கள்!
இலக்கற்ற தென்றலினும் போதையாய்
மீண்டும்,
மலைச்சாரல் எங்கும்
குறிஞ்சியின் அழகு விரிகின்றது
முல்லை
மலர் சொல்கிறது மல்லிகைக்கு:
அஸ்ஸலாமு அலைக்கும்
உன் மீது சாந்தி உண்டாகட்டும்
உன் மீதும் பையா,
என்னுடன்
இந்தப் புல்வெளியில் நட
மீண்டும், எங்கும் சூஃபிகள்
வெட்கப்படுகிறது
மொட்டு
காற்று
திறக்கிறது சட்டென்று
என் நண்பனே!
நண்பன்
இருக்கிறான் இங்கே
ஓடையில்
நீர் போல
நீரில் பூப்போல
நர்கிஸின் சமிக்ஞை: நீ
சொல்லும் போது
தேக்கிடம்
சொல்கிறது கிராம்புக் கொடி
நீயே
எனது நம்பிக்கை
தேக்கின்
பதில்:
நான் உனது சொந்த வீடு
நல்வரவு
ஆரஞ்சிடம்
கேட்கிறது ஆப்பிள்
ஏனிந்த
முகச்சுளிப்பு?
”தீயோர்
என் அழகினைக் காணாதிருக்க!”
பறந்து
வருகிறது மணிப்புறா எங்கே? நண்பன் எங்கே?
குயிலின் ஸ்வரம் சுட்டுகின்றது ரோஜாவை
மீண்டும்,
வசந்த காலம் வந்துள்ளது
ஒவ்வொன்றின்
உள்ளும் வசந்த மூலம் எழுகின்றது
நிழல்களின் ஊடாக நகரும் நிலா
பலவும்
சொல்லாமல் விடப்பட வேண்டும்
மிகவும் தாமதமாகி விட்டபடியால்
இன்றிரவு
பேசாத சங்கதிகள் எல்லாம்
நாளைக்கு வச்சுக்குவோம்